தூத்துக்குடி:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 387 மெகாவாட் மின்சாரமும், கர்நாடகத்திற்கு 157.9 மெகாவாட் மின்சாரமும், புதுச்சேரிக்கு 9.5 மெகாவாட் மின்சாரமும், ஆந்திர மாநிலத்திற்கு 254.6 மெகாவாட் மின்சாரமும், கேரள மாநிலத்திற்கு 72.5 மெகாவாட் மின்சாரமும் மத்திய மின் பகிர்மானம் மூலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் 118.5 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் சூப்பர்வைசர் உள்ளிட்டப் பணிகளில் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எஃப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் உள்ள பொருள் வைப்பு அறையில், அனல் மின் நிலையத்திற்குத் தேவையான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் நிக்கல் கலந்த குப்ரோ நீக்கல் பைப் உள்ளிட்டப் பல்வேறு உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள் வைப்பு அறையை கடந்த 9ஆம் தேதி படகு மூலம் வந்து வைப்பு அறையில் துளையிட்டு அதிலிருந்து 690 கிலோ எடை கொண்ட 829 எண்ணிக்கையிலான குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட விலை உயர்ந்த உதிரி பாகங்களை இரண்டு நாட்களாக முகாமிட்டு 10ஆம் தேதி படகு மூலம் கடல் வழியாக 15க்கும் மேற்பட்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் எந்தவிதப் புகாரும் அளிக்காமல் இந்தத் திருட்டு சம்பவத்தை மறைப்பதற்கு முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து, அனல் மின் நிலையப் பணியாளர்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல் தெரிய வந்தது. பின்னர், அனல் மின் நிலைய நிர்வாகம் பொருள் வைப்பு அறையைக் கண்காணிக்கும் ஊழியர்கள் நான்கு பேரை அதிரடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது, நிர்வாகம். மேலும், இது தொடர்பாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மின் வாரிய லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர். அரசுக்குச் சொந்தமான அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது