கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த வில்லிசேரி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட உள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கிக் கிளையின் பணிகளை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'தலைமை தேர்தல் அதிகாரி, மாநில ஆளுநர், தனிப்பட்ட அரசியல் கட்சி சித்தாந்தங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என நீதிமன்றமே கூறியுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் சதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் கவனக்குறைவாலும், சரியாக செயல்படாததாலும் கார் வெடிப்பு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரம் கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் ஏற்கெனவே ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது. கோவை குண்டுவெடிப்புக்கு தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டிய, அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்மந்தமாக ஏன் வாய்திறக்கவில்லை.