தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது, இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுப்புராஜ். இவருக்கு திருமலாபுரம் கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், நேற்று (பிப்.12) மாலை சுப்புராஜ் தனது தோட்டத்திலிருந்துள்ளார். அப்போது, திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, அவரது கணவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அவர்களது மகன் செல்வகுமார் உள்ளிட்ட சிலர், அவரது தோட்டத்திற்குச் சென்று, நிலத்துக்குக் கம்பி வேலி அமைத்தது தொடர்பாகக் கேட்டுள்ளனர்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆசிரியர் சுப்புராஜை தலை கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு தப்பியோடி தலைமறைவாகினர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் நிலைய போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் சுப்புராஜை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு - பாதுகாக்க முயன்ற இரு காவலர்கள் சுட்டுக்கொலை!