தூத்துக்குடி:சாத்தான்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த 95 வயதான மூதாட்டி தங்கம், தனது 3 மகன்களுடன் வசித்து வருகிறார். இதில், மூத்த மகன் ரவி என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இரண்டாவது மகன் பாஸ்கர் என்பவர் இரண்டு கால்களும் நடக்க முடியாத ஊனமுற்ற மாற்றுத்திறனாளியாகவும் உள்ளார். மூன்றாவது மகன் ராமன் என்பவர் மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம், தனக்கும் முதியோர் ஓய்வூதியம் வேண்டுமென சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு மனு அனுப்பியிருந்தார். இந்நிலையில், அவர் மனு கொடுத்த அடுத்த மாதத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை மாதம் தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை அதிகாரிகள் மூதாட்டி தங்கத்திடம் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் வங்கிக்குச் சென்று பார்க்கும் அளவிற்கு விவரம் அறியாதவர் என்பதால் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டதை மூதாட்டி தங்கம் பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் வங்கிக் கணக்கு புத்தகத்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வங்கியில் வரவு வைத்து பார்த்த போது கடந்த 3 வருடங்களாக மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது.
அதேநேரம், மூன்று வருடங்களாக வங்கியில் இருந்து பணத்தை எடுக்காத நிலையில் மொத்தமாக கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட முதியோர் ஓய்வூதிய பணத்தைத் திருப்பி பெறப்பட்டதாக பதிவாகி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தங்கம், முதியோர் ஓய்வூதியம் வருகிறது என வங்கி அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில், அந்த பணத்தைத் தான் எடுக்கவில்லை எனவும், இதை அனைத்தையும் தமிழ்நாடு அரசே திரும்பப் பெற்றிருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது என கண்ணீர் மல்க நேற்று (நவ. 23) தெரிவித்து இருந்த நிலையில் இதனை "ஈ-டிவி பாரத்" செய்தியாக வெளியிட்டு இருந்தது.