தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் வறட்சியால் கருகும் பனை மரங்கள்.. நிலத்தடி நீரை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன? - palm trees scorch by drought

தூத்துக்குடியில் பனை மரங்கள் கருகி வரும் நிலையில், பனை மரம் சார்ந்த தொழில்களும் கடும் சரிவை கண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் வறட்சியால் கருகும் பனை மரங்கள்
தூத்துக்குடியில் வறட்சியால் கருகும் பனை மரங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 10:37 PM IST

தூத்துக்குடியில் வறட்சியால் கருகும் பனை மரங்கள்

தூத்துக்குடி:பனங்காய் பறித்தல், நுங்கு வண்டி வைத்து விளையாடுதல் போன்றவைகளை குழந்தைப் பருவத்தில் கண்டிராதோர் என யாரும் இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் மாநில மரமாக அறியப்படும் இந்த பனை மரம், பலரின் வாழ்வாதாரமாக இயங்கி வருகிறது. புதுக்கோட்டை, கோரம்பள்ளம், வேம்பார் மற்றும் திருச்செந்தூர் பகுதியை சுற்றியுள்ள உடன்குடி, சாத்தான்குளம், பேய்குளம் ஆகிய பகுதிகளில் பல ஆயிரக்கணக்கில் பனை மரங்கள் உள்ளது.

பணம் என்ன மரத்தில் காய்க்கிறது என்று கூற்றைப் பனை மரம் அதன் பயன்களால் நிரூபணமாகியுள்ளது. பனைமரம் மூலம் பதனீர், பனங்கற்கண்டு, பனை கிழங்கு, பனம்பழம், நுங்கு, பனையைக் கொண்டு கட்டில் பின்னும் நார், பனை ஓலைகளைப் பக்குவப்படுத்திச் செய்யப்படும் பாய்கள், பெட்டிகள், அலங்கார பொருட்கள், பனங்கட்டைகள், ஓலைகள் என்று பனை மரத்தின் அடிவேர் முதல் தலை ஓலை வரை பல்வேறு வகையில் வருமானத்தை அள்ளி தரும். மர வகைகளில் பனை மரம் மட்டுமே வறட்சியைத் தாங்கி நிற்கக்கூடிய தன்மை படைத்துள்ளது.

கிராமங்களில் அதிகளவில் இருக்கும் பனைமரத்தை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏழைகளின் வாழ்வாதாரத்தில் முதன்மை பெற்றுவரும், இந்த பனை மரங்கள் தற்போது கருகி காய்ந்து, முற்றிலும் முறிந்து பட்டு போகும் அளவிற்குச் சூழல் நிலவியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை அதிகளவு பெய்தது. கடந்த ஆண்டு பருவ மழை சரிவரப் பெய்யவில்லை. ஆனால், கடும் வறட்சியையும் தாண்டி வளரக் கூடிய தன்மைகொண்ட பனை மரங்கள், அதன் தன்மையைக் கடந்து தற்போது கருகிக்கொண்டு வருகின்றது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு திட்டங்களையும் புள்ளி விவரங்கள் எடுத்துச் செயல்படுத்தும் அரசு, தமிழகத்தில் அந்தந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவை எவ்வளவு? அப்பகுதியில் விவசாயத்திற்குத் தேவைப்படும் நீர் அளவு எவ்வளவு? விவசாயத்திற்காக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் எவ்வளவு? இதில் அப்பகுதி கண்மாய், குளங்கள் மூலம் தேவை எவ்வளவு பூர்த்தியாகிறது என கணக்கிட வேண்டும்.

அதற்குரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள முன் வருமா? என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வி குறியாகவே உள்ளது. மேலும், பனை மரங்களை மீட்டெடுக்க கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியோடு இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி எம்.பி கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் இன்று வரை அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்று பனை மரத்தொழிலாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்றும், வறட்சியால் கால்நடைகளும் உணவின்றி அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும், அதற்குரிய இழப்பீடு மற்றும் நிலத்தடி நீர் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி பஞ்சாயத்துத் தலைவருமான சித்ராங்கதன் ஈடிவி பாரத் தமிழ் செய்திகளுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "கடந்த ஒரு மாத காலமாக உடன்குடி, சாத்தான்குளம், பேய்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பட்டுக் கொண்டிருக்கிறது.

காரணம், நிலத்தடி நீர்மட்டம் கீழே போய்க் கொண்டிருக்கிறது. நீர் ஆதாரம் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. பனைமரம் உருவாகி 25 ஆண்டுகள் பலம் தரும். இந்த மரம் கருகுவதால் இதனையே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பொருத்த அளவிற்கு மக்கள் பனை மரத்தொழில் செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பனை மரங்கள் மூலம் பனை கிழங்கு, கருப்பட்டி, பதனீர் இதுபோன்ற ஒவ்வொரு பொருள்களையும் தயாரித்து, சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈடுகின்றனர். ஆகவே, அரசாங்கம் பனை மரங்களை காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும். மேலும் கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ஒரு கோடி பனை விதைகள் விதைக்கக்கூடிய திட்டங்கள் நடத்தியிருந்தார்கள். இந்தத் திட்டம் வரவேற்கக் கூடியதானாலும், இருக்கக்கூடிய பனைமரங்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் ஆண்டுதோறும் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கின்றது. அந்த தண்ணீரைச் சேமித்தால் பனை மரங்களைக் காப்பாற்ற முடியும். இதனால், இப்பகுதி பொதுமக்கள் நகரங்களை நோக்கிப் போகக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசு தலையிட்டுப் பட்டுப்போன ஒவ்வொரு பனை மரங்களுக்கும் இழப்பீடு வழங்கி பனை மரங்களையும், பனை சார்ந்த தொழில்களையும், தொழிலார்களையும் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சென்னையில் 'இந்தியா கூட்டணி மகளிர் மாநாடு'.. கனிமொழி தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்.. முதலமைச்சர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details