தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனால், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன.
திருநெல்வேலி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளின் இன்று (டிச.26) வரை பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் ஆய்வு செய்து நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும், மத்திய அரசு நிவாரண நிதியைச் சரியாக வழங்கவில்லை எனவும், வானிலை முன்னறிவிப்பு குறித்தும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பும் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) மதுரையிலிருந்து ஹெலிக்காப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத கோரம்பள்ளம், அந்தோணியார்புரம், முறப்பநாடு, ஏரல் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ளார். அந்த மனுவில், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால் உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் எனவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புத் துறையில் உள்ள நிதி போதாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இறுதிப் போட்டியில் ஏமாற்றம்.. வேகமிகு வீரர்களின் அசாத்திய சாதனைகளால் 2024-இல் வீறுநடை போடுமா இந்திய அணி?