தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சிக்கான புதிய திட்ட அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை இன்று (நவ.11) நடைபெற்றன.
இதற்கான ஆய்வுப்பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மாவட்ட எல்லையான வல்லநாடு பகுதியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்பட அரசு துறை முக்கிய அலுவலர்கள் முன்னதாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு 23 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான "லீனியர் ஆக்சிலேட்டர்" எனும் நவீன சிகிச்சை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை அளவீடுகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் ஆகியவை குறித்தும், தற்போதைய கரோனா பாதிப்புகள், அரசு ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்தும் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.