ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடிக்குத் தான் முதல் முதலில் ரயில் இயக்கப்பட்டது. மேலும் திருநெல்வேலியில் இருந்து டிக்கெட் எடுத்து தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக இலங்கைக்கு சென்று விடலாம். அந்த அளவுக்கு வசதி வாய்ப்பு இருந்தது. ஆனால் பிற்காலத்தில் இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் அடைந்த பிறகு அந்த வாய்ப்பு நிறுத்தப்பட்டு விட்டது. திருச்செந்தூருக்கும் ரயில் இயக்கி இன்றோடு 100 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதற்காக திருச்செந்தூர் ரயில் பாதை குறித்த வரலாற்றைக் காணலாம்.
திருநெல்வேலி & திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ஜில்லா போர்டு ரெயில்வே என்று பெயர். காரணம் இந்த ரயில் நிலையத்தினைத் திருநெல்வேலி ஜில்லா போர்டு அமைத்தது. திருச்செந்தூர் ரயிலை பொறுத்தவரை 1904ஆம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வேயும் நடந்துள்ளது. 1914ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டன. பணிகள் முடிந்து 23.02.1923-ம் தேதி, சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது. அதன் பின் நெல்லை - திருச்செந்தூர் அகல ரயில் பாதை 27.09.2008 இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது 100 ஆண்டு விழாவை கொண்டாடும் திருச்செந்தூர் ரயில் பாதையில் மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1923 ஆம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதை இன்று அகல ரயில் பாதையாகவும் மின்சார ரயில் வந்து செல்லும் வகையில் மின்பாதையாகவும் ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனமயமாகவும் பல்வேறு வளர்ச்சியடைந்து, தென் மாவட்டங்களில் முக்கிய இருப்புப் பாதையில் ஒன்றாக லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றாட தேவைக்கும் அத்தியாவசிய பணிக்கும் தேவையான ரயில்வே பாதையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, ”திருச்செந்தூர் பகுதியில் ஆரம்ப காலத்தில் இருந்தே ரயில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் இருந்துள்ளது. ஆரம்ப காலத்தில் திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை முன்பு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. டிராலி என்று சொல்லப்படும் ஒரே ஒரு பெட்டி வைத்து ஓடும் சிறிய ரயில் பாதை இது. குலசேகரபட்டினத்தில் சர்க்கரை ஆலை நடத்தியவர்கள் அமைத்த ரயில் பாதை.
ஆலைக்கு வேண்டிய பதநீரைக் கொண்டு வர இது பயன்பட்டது. 1927-ல் ஆலை மூடப்பட்ட பிறகும் கூட இந்த ரயிலை மட்டும் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். பொது மக்களையும் ஏற்றிக்கொண்டார். பஸ்கள் வந்ததும் இந்த ரெயிலை நிறுத்தி விட்டார்கள். தனியார் பாதை என்பதால் தனியார்கள் தாங்கள் போட்ட தண்டவாளத்தினையும் பெயர்த்துக்கொண்டு சென்று விட்டனர்.
இதற்கிடையில் 1904-ல் சோதனை செய்த நெல்லை & திருச்செந்தர் ரயில் பாதை 24.02.1923இல் துவங்கப்பட்டது. அதன் பின் அகல ரயில் பாதையாக திருச்செந்தூர் பாதை மாற்றப்பட்டு 27.09.2008 அன்று திறக்கப்பட்டது. தற்போது செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் இந்த பாதையில் இயங்கி வருகிறது. இதற்கிடையில் இந்த பாதையில் மின்சார ரயிலை இயக்க அனைத்து பணிகளும் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது.