திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற நாடு, மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து விரதமிருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி விழாவில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.15) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சன்னதிகளுக்கிடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு, யாகசாலை பூஜைகள் தொடங்கின. அங்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளவே கும்ப பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் யாகசாலையில் சுவாமி சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும்; யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சுப்ரமணியசுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து, 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் அதே இடத்தில் சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.