தூத்துக்குடி:ஆறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மாசித் திருவிழா, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழாவின் 3ஆம் திருநாளான நேற்று (பிப்.27) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.