உலகப் புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இன்று குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் தவசுக்குப் புறப்பட்டு, தெப்பக் குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, தவசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து தெற்கு ரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.