தூத்துக்குடி:மாமன்னன் திரைப்படம் மூலம் தன் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி மாயாண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றி தீட்சிதர்களை விரட்டியடிக்கலாம் என்ற உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது.
தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கிறேன். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனப்படி தன் கடமையை செய்கிறார். விசாரணை குற்றவாளியாக கைதாகி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக முடியும்' என கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த காலத்தில் ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி செந்தில் பாலாஜியையும் விஜயபாஸ்கரயும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது ஸ்டாலின் தான் என சுட்டிக்காட்டிய அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாமாகவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விலக்கியிருக்க வேண்டும் எனக் கூறினார்.