தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படும் இந்த பள்ளியில், நேற்று (செப். 5) பிற்பகலுக்கு மேல் பத்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
அதில் ஆறுமுகநேரியில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர், நாசரேத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மற்றும் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவர் என 3 பேரும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 3 மாணவர்கள் மாயமானது குறித்து பள்ளி நிர்வாகத்தில் இருந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இதுதொடர்பாக நாசரேத் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பள்ளியின் சுற்று சுவரில் ஏறி குதித்து மூன்று மாணவர்களும் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது பள்ளி மாணவர்கள் மாயமானது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, போலீசாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக தெரிவிப்பதாக ஊர் மக்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று மாணவர்களின் புகைப்படங்கள், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதன்பின்னர், காணாமல் போன மூன்று மாணவர்களும் ரயிலில் சென்னை சென்று கொண்டிருந்தாக தகவல் கிடைத்துள்ளது. அதனை அறிந்த போலீசார் அவர்களை வாஞ்சி மணியாச்சி பகுதியில் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் அந்த மாணவர்கள் 3 பேரையும் நாசரேத் போலீசார் பத்திரமாக தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.
மாணவர்கள் என்ன காரணத்திற்காக பள்ளியின் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றார்கள், சென்னை செல்லும் ரயிலில் ஏறி பயணித்தது எதற்கு என்பன குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த, 3 மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டுற்கு திரும்பவில்லை என கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!