தூத்துக்குடியில் கடந்த சில நாள்களாக கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. தினமும் சராசரியாக 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜூலை 26) முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் நேற்று மட்டும் 248 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி நகராட்சி, சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 2,314 பேர் கரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு