தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் குரு பூஜை விழாவுக்கு சிலர் நன்கொடை வசூலிப்பதாக கோவில்பட்டி நகர பசுபதி பாண்டியன் பேரவைச் செயலாளர் கற்பகராஜ் என்பவருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பேரவை நிர்வாகிகளுடன் சென்று, வசூலில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தார்.
அப்போது அவர்கள் பசுபதி பாண்டியன் குருபூஜை விழா எனக் கூறி போலியாக நன்கொடை ரசீது புத்தகம் அச்சிட்டு, பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கற்பகராஜ் மற்றும் அவரது சகாக்கள், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி(39), மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த நாராயணகோபால்(33), தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியாபுரத்தைச் சேர்ந்த வீரமணி(39) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பசுபதிபாண்டியனின் 11-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படும் என தேவேந்திரகுல இளைஞர் அணி, தமிழ்நாடு என்று நோட்டீஸும், சி.பசுபதிபாண்டியன் பேரவை என்ற பெயரில் நன்கொடை ரசீது புத்தகமும் அச்சிட்டு வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:தஞ்சை கலெக்டர் ஆபிஸ் முன் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு; எம்எல்ஏ கைது