தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு; கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - central govt coal shortage

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்து சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வரும் நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பதால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு ; கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு ; கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்

By

Published : Apr 22, 2022, 4:11 PM IST

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் தற்போது கோடைகாலம் என்பதால் மின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நிலவரப்படி நாளொன்றுக்கு சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் முதல் 17,000 மெகாவாட் வரை மின் தேவை இருந்து வருகிறது.

இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசு நிலக்கரி ஒதுக்கீட்டை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதில் இரண்டாவது அலகு ஏற்கெனவே பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 3 மற்றும் 4-வது அலகு இன்று காலை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இங்கு வெறும் 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி,திருவள்ளூர்,சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் மின் உற்பத்தி செய்ய நாளொன்றுக்கு சராசரியாக 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

இந்த நிலக்கரியை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் இருந்து பெற்று வருகிறது. குறிப்பாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி ஒதுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை பொறுத்தவரை ஐந்து அலகுகளும் செயல்பட்டால் நாளொன்றுக்கு சராசரியாக 15,000 முதல் 18,000 டன் வரை நிலக்கரி தேவைப்படும். ஆனால், இங்கு நேற்று வெறும் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா துறைமுகத்திலிருந்து 53 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தற்போது சுமார் 80,000 டன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.

இந்த நிலக்கரியை வைத்து 5 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். இதனால் மத்திய அரசு போதிய நிலக்கரி ஒதுக்காத பட்சத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மின்வெட்டு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘நிலக்கரி வழங்குவதில் சிக்கித் தவித்துவரும் ஒன்றிய அரசு’

ABOUT THE AUTHOR

...view details