தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் தொட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான காவல் துறையினர் இன்று (ஜூலை 16) அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததையடுத்து, காவல் துறையினர் காரைச் சோதனையிட்டனர். அப்போது காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கி, ஐந்து தோட்டோக்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
மேலும், காரில் வந்த திருநெல்வேலி மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத்குமார், சுரேந்திரன் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோட்டிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.