திருநெல்வேலி: சரி வர வேலைக்குச் செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி நோயால் அவதி உற்று உயிரிழந்தார், கணவர் மாணிக்கவாசகம். மனைவி பண்டார செல்விக்கு மஞ்சள் காமாலை உள்பட பல்வேறு உடல் கோளாறுகள். அருகில் இருக்கும் பள்ளியில் ஒரேயொரு சீருடையை மட்டும் வைத்துக் கொண்டு 10ஆம் வகுப்பு படித்த மகனும், ஒரு மகளும் இந்த தம்பதிக்கு உள்ளனர்.
ரேஷன் அரிசி சாப்பாடு, தனது அம்மா தங்கி இருந்த பாழடைந்த பழைய வீடு, வீட்டின் ஒரு அறையில் எரியும் ஒற்றை மின் விளக்கு என வாழ்கிறது மூவர் கொண்ட குடும்பம். இந்த வீடும், அவரது உறவினர்களால் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் நிலை. இருப்பினும், மகன் 8ஆம் வகுப்பு பயிலும்போது தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றதால் மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய், தாய் பண்டார செல்விக்கு மாதம் ஆயிரம் ஆதரவற்றோர் உதவித்தொகை என மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் என்பது குடும்ப வருமானம்.
ஆனாலும், கேஸ் சிலிண்டர் விலை இறக்கு கூலியோடு சேர்த்து ஆயிரத்து 200 ரூபாய் ஆகிவிட்டதே. எனினும், வறுமையின் பிடியில் வாடித் தவித்த மகனுக்கு கல்விச் செல்வம் மட்டும் கொட்டிக் கிடைத்தது. இதனை அள்ளிப் பருக அவரது பள்ளி ஆசிரியர்கள் முன் வர, ஒரு வழியாக 10ஆம் வகுப்பை முடித்தான்.
அதிலும், 495 என்ற மாவட்ட அளவிலான முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆனால், வறுமை தவிக்க விட, கல்வி பசியைத் தூண்டியது. இதற்கும் அவரது பள்ளி ஆசிரியர்கள் முன்னேறி வர, குடும்பம் ஒரு வறுமையின் கோரப்பிடியில் தவித்து வருகிறது. இவை அனைத்தும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் 2ஆம் பாகத்தின் கதை அல்ல. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருக்கும் உண்மையான நிகழ்கால நிகழ்வே.
மட்டன் கடைசியா சாப்பிட்டது எப்போ தெரியுமா? நெல்லை மாவட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை தொடர்கிறார், மாணவன் அர்ஜுன பிரபாகரன். இப்படியான நிலையில் வாழ்ந்து வரும் தாய் பண்டார செல்வி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நாங்கள் கடும் வறுமையில் இருந்து வருகிறோம்.
தேசிய திறனாய்வுத் தேர்வில் எனது மகன் முதல் இடம் பிடித்து, அதன் மூலம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் குடும்பச் செலவுக்கு உதவியாக இருக்கிறது. இருப்பினும், வாழ்வாதாரம் இல்லாததால் வறுமையில் இருந்து மீள முடியவில்லை. எனக்கு உடல் நலம் சரியில்லாததால், மாற்றுத் துணி கூட இல்லாமல் அர்ஜுன பிரபாகரன் தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறான்.
வருமானம் இல்லாததால் கிடைக்கும் சாப்பாட்டை வைத்து பசியை போக்கி வருகிறோம். ஒரு நாள் சமைக்கும் குழம்பை மூன்று நாட்கள் வைத்து சமாளிப்போம். வாரத்தில் ஒருமுறை மட்டுமே காய்கறி வாங்குவேன். நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக அர்ஜுன பிரபாகரன் 1ஆம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய அப்பா மட்டன் எடுத்து கொடுத்தார்.