தூத்துக்குடி:ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தின் கீழ் 'பாரத்' மானிய உரம் விற்பனையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், போக்குவரத்துக்கான மானிய சுமையை குறைப்பதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளை நிலங்களுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்களை அதனுடைய விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தவும், நாட்டில் உரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சொல்லும் போது ஏற்படும் போக்குவரத்து செலவீனங்களை தவிர்க்கவும் இந்த திட்டம் பலன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நடந்த பிரதமரின் விவசாய கவுரவ மாநாட்டு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஸ்பிக் யூரியா இனி பாரத் யூரியா என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து விநியோகம் செய்துள்ளது.