தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 2-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
அதன்படி, வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்கள் சாலைகளில் இடது புறம் குழுவாக செல்வதால், வாகனங்கள் அவர்கள் மீது மோதாமல் இருக்க வலது புறம் முந்திச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேராத வண்ணம் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளளாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.