தூத்துக்குடி:சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ மூலம் அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதமானது.
செல்லத்துரை பதிவிட்ட அந்த வீடியோவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம். எனது பெயரை, எனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனை நீக்க மனு கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் காவல்துறையில் பணியாற்றும் என்னைப் போன்ற காவலர்களின் நலன்களைப் பேண சங்கம் அமைத்தால் தான் சரியாக இருக்கும்.
இதுபற்றி தாங்கள் ஆலோசித்து சங்கம் அமைக்க வேண்டும். குறிப்பாக பெண் காவலர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சோதனைகளை அனுபவிக்கின்றனர். இதனால் சங்கம் அமைப்பது அவசியம். இல்லாவிட்டால் தற்கொலை செய்யும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை” என பதிவிட்டிருந்தார்.