தூத்துக்குடி வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சொக்கப்பழங்கரை கிராம மக்கள்.. தூத்துக்குடி:தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் நிலைகுலைய இருந்தது.குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத மழையைச் சந்தித்து மிகப் பயங்கரமான வெள்ளத்தைச் சந்தித்தது.
குடியிருப்பு, சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் குடிநீர், மின்சாரம், உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், மாநில தேசிய பேரிடர் குழு, இந்திய ராணுவம், இந்தியக் கடலோர கடற்படை குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், வெள்ளத்தால் கிராமங்கள் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாகச் சாலைகள், பாலங்கள் எனக் கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையாமல் தவித்து வந்தனர்.
அந்த வகையில் திருச்செந்தூர் அருகில் உள்ள சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்துக்குட்பட்டு சொக்கப்பழங்கரை என்ற கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் இருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், இந்த கிராமமானது தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளதால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழை காரணமாகவும் தாமிரபரணி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளது.
மேலும், வெள்ள நீரானது கிராமத்தைச் சூழ்ந்து வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களுக்கு வெள்ளத்தில் சென்றதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்து வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தும் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், அப்பகுதியிலிருந்து பக்கத்து ஊரான ஆத்தூர் பகுதிக்குக் கூட செல்ல முடியாத அளவிற்குச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த நான்கு தினங்களாக அத்தியாவசிய தேவைகளான உணவு நீர் உடை இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, செய்வது அரியாமல் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பேரிடர் காலத்திலும் எதிர்கட்சித் தலைவர் மலிவான அரசியல் செய்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு!