தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28ஆவது கட்ட விசாரணை கடந்த 5ஆம் தேதி கடற்கரை சாலையில் உள்ள ஒரு நபர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி இன்று (15-ந்தேதி) நிறைவு பெற்றது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “28ஆவது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம். 94 பேர் காவல் துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்துள்ளோம்.
இதுவரை மொத்தம் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல் துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். விசாரணைக்கு ரஜினி நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ”ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒரு நபர் ஆணையம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.