தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணையை முடித்தது ஒரு நபர் ஆணையம் - oneman commission

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சாட்சிகளின் விசாரணை நிறைவு பெற்றது என ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- சாட்சி விசாரணையை முடித்தது ஒரு நபர் ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- சாட்சி விசாரணையை முடித்தது ஒரு நபர் ஆணையம்

By

Published : Feb 20, 2022, 1:28 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடியில் 2018 மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையத்தின் 36ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த பிப். 14ஆம் தேதி தொடங்கியது.

இதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி , கூடுதல் காவல்துறைத் தலைவர் (சட்டம்-ஒழுங்கு) விஜயகுமார் உள்பட ஏழு பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஒருநபர் ஆணையத்தின் 36வது அமர்வு விசாரணை நேற்றுடன் (பிப். 19) நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் பேட்டி

அப்போது அவர் கூறுகையில், "36ஆவது அமர்வு விசாரணையில் ஆஜராவதற்காக ஏழு பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டதில் ஆறு பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தனர். ஒருநபர் ஆணையத்தின் 36ஆவது அமர்வுடன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

ஒருநபர் ஆணையம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தனது விசாரணையை 2018 ஆகஸ்ட் 9இல் தொடங்கியது. அன்று முதல் இதுவரை நடந்த 36 கட்ட விசாரணையிலும் சேர்த்து மொத்தம் 1,426 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

1048 சாட்சிகள் விசாரணை

அழைப்பானைக் கொடுக்கப்பட்டவர்களில் மனுதாரர் தரப்பில் 781 சாட்சிகள், அரசு தரப்பில் 255 சாட்சிகள், ஆணையமே முன்வந்து 12 சாட்சிகள் என மொத்தம் 1,048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதுபோல, மனுதாரர் தரப்பில் 1,189 ஆவணங்கள், அரசு தரப்பில் 262 ஆவணங்கள், ஆணையத்தால் விசாரிக்கப்பட்டவர்களிடமிருந்து 93 ஆவணங்கள் என 1,544 ஆவணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளன

ஆணையத்தின் முழுமையான விசாரணைக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பளித்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், பத்திரிக்கைகள் என அனைவருக்கும் ஒரு நபர் ஆணையம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது. இனி, ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் தொகுக்க மூன்று மாத கால அவகாசம் தேவைப்படலாம். அது நிறைவுற்றதும் ஒரு நபர் ஆணையத்தின் முழு அறிக்கையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆஜரான கிரிஜா வைத்தியநாதன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details