தூத்துக்குடி: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைவுப்படுத்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று (அக். 22) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையின் போது தண்ணீர் தேங்குவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.