தூத்துக்குடி:உலக அளவில் இயற்பியல், வேதியியல், கலை அறிவியல், மருத்துவம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் அடிப்படையில் பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகளை வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சிக்கட்டுரைகள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்கள் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவ்வாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர்களில் இரண்டு விழுக்காட்டினரை கணக்கில் எடுத்துக்கொண்டு, அவற்றில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளைத் தேர்வு செய்து ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் பொறுப்பை ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) செய்து வருகிறது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
அதன்படி சமீபத்தில் ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால், உலகின் சிறந்த ஆராய்ச்சியாளராக தூத்துக்குடியைச் சார்ந்த செல்வம் என்பவரும் தேர்வு செய்யப்பட்டு, சாதனைப்படைத்துள்ளார். புவியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவரான இவர், தற்பொழுது தூத்துக்குடி வ. உ. சி. கலை அறிவியல் கல்லூரியில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தன் கல்லூரி பணியோடு புவியியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி, வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், முனைவர் செல்வம்.
அவ்வாறாக முனைவர் செல்வம் இதுவரை சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் புவியியல் ஆராய்ச்சி சார்ந்து 80-க்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவை உலகில் உள்ள மற்ற தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் புவியியல் துறை சார்ந்து உலக அளவிலான தரவரிசையில் 218ஆவது இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதைப்போல இந்திய அளவில் சிறந்த 3,352 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் முனைவர் செல்வம் 2,170ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடலோர வாழ்வியலை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி
இத்தகைய பெருமைமிகு சாதனைகள் குறித்து முனைவரும் ஆராய்ச்சியாளருமான செல்வம் நமக்கு பிரத்யேகமாக பேட்டியளிக்கையில்,
'உலக அளவில் புவியியல் துறை சார்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் குறைவுதான். புவியியல் சார்ந்து புவி மாசுபாடு, நீரில் கலந்துள்ள மாசுபாடு, மண்ணில் கலந்துள்ள மாசுபாடு, புளூரைடால் ஏற்படும் பாதிப்புகள், கடல் நீரிலிருந்து நன்னீரைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளை எழுதி வெளியிட்டுள்ளேன்.