தூத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டம்வி.எம். சத்திரம் ஜான்சிராணி நகர் பகுதியைச் சேர்ந்தவர், ராமசாமி. இவர், தூத்துக்குடியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக வேலை செய்து வருகிறார். நேற்றிரவு (ஜன.25) ராமசாமி தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கொள்ளை கும்பல் அவர்களை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 50 சவரன் நகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பியது.
கொள்ளையடித்த ஐந்து பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் தூத்துக்குடி நோக்கி சென்றனர். அப்போது புதுக்கோட்டை அருகே ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் கொள்ளையர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, கொள்ளை கும்பல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நெல்லையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தென்பாகம் காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று தப்பி ஓட முயன்ற கொள்ளை கும்பலை காவல் துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.