தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா, வருகின்ற ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தங்கத்தேர் வீதி உலா நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்கேற்ப, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு, கனிமொழி கடிதம் எழுதி இருந்தார். இதனைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் 2 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
இந்த சிறப்பு ரயில் (06005) 3.8.2023 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. அதே போன்று மறுமார்க்கத்தில் 4.8.2023 அன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.
மேலும், விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மீண்டும் சென்னைக்கு செல்வதற்கு வசதியாக 5.8.2023-ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், 6.8.2023-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.