தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையானது, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில், 12 அமர்வுகளில், முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் நேற்று (டிச.09) நடைபெற்றது.
இந்த அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதில், தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா ஒரு அமர்வு உள்பட மொத்தம் 12 அமர்வுகளில், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் விசாரணையானது நடைபெற்றது.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வங்கி வாராக்கடன் தொடர்பான 732 வழக்குகளில், ரூ.2 கோடியே 4 லட்சத்து 58 ஆயிரத்து 868 மதிப்புள்ள 126 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3,694 வழக்குகளில், ரூ.6 கோடியே 7 லட்சத்து 55 ஆயிரத்து 144 மதிப்புள்ள 2,793 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.