தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மீண்டும் நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. அதில் மருத்தவ படிப்பில் சேர்ந்த 150 மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நீட் தேர்வு நுழைவு சீட்டு, மருத்துவ கல்லூரி இயக்ககத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனுமதி சீட்டு, கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களால் அளிக்கப்பட்ட சுயசான்றிதழ் ஆகியவை சரி பார்க்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன் செய்தியாளரிடம் பேசுகையில், "மருத்துவக்கல்லூரி இயக்ககத்தின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கு அனைத்து மாணவர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இதில் எந்த மாணவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது"என்றார்