தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும், நெல்லை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும்; 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 80 விழுக்காடு பெண்களே பணிபுரிகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு மட்டுமின்றி, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் ரூ.300 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வட மாநிலங்களில் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடக்கம், மின் கட்டணம், லாரி வாடகை உயர்வு ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.