இந்தோ - ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி வீரர்கள் தூத்துக்குடி: ஸ்ரீலங்கா ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே பெடரேஷன் சார்பாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள சார் ஜான் கொதலாவால கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி, 5வது இந்தோ - ஸ்ரீலங்கா சர்வதேச அளவிலான கராத்தே போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ இந்தியத் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது. இதில், 25 வயதுக்கு மேல் 80+ எடைப் பிரிவில் இந்தியா சார்பாகத் தூத்துக்குடி முத்து ராஜா சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
மேலும், 16வயது மேற்பட்ட 65+ எடைப் பிரிவில் ஹர்ஷத் ராஜ் சண்டை பிரிவில் தங்கப் பதக்கமும் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும்; 15 வயது 50+ எடைப் பிரிவில் சந்தோஷ் சுப்பிரமணி கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும் சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும்; 14வயது 85+ எடைப் பிரிவில் யோவான் கேஸ்ட்ரோ கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும் சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இதுமட்டும் இல்லாமல், 14 வயது 70+ எடைப் பிரிவில் சாரு பத்ரிநாத் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும்; 12 வயதுக்கு உட்பட்ட 30+ எடைப் பிரிவில் ஸ்நோவின் ஐசக் சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் கட்டா பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் இவர்கள் அனைவரும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களை பல்வேறு அமைப்பினர், ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ இந்தியப் பள்ளியின் அனைத்து மாநில, மாவட்ட கராத்தே தலைவர்கள், செயலாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களான முத்து ராஜா மற்றும் ஹர்ஷத் ராஜ் ஆகியோர் கூறுகையில், "இன்றைய இளைஞர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் தங்களது வாழ்க்கை இழந்து வருகின்றனர். இதுபோன்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் தன்னை தற்காத்துக்கொண்டு தங்களது உடல் நலனையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் 2023; 20.64 சதவீத வாக்குகள் பதிவு.. வாக்களித்த திரைப் பிரபலங்கள்!