தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் பிரசித்திபெற்ற குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் 'தென்பழநி' என அழைக்கப்படும் இக்கோயில் ஆண்டுதோறும் உலக மக்களின் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் எனவும் 'மலர்க்காவடி எடுத்து வழிபாடும் விழா' கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு மலர்க்காவடி விழா இன்று தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் காவடி மேள தாளங்கள் முழங்க மயில் காவடி ஆட்டம் நடைபெற்றது. மயில் காவடி ஆட்டத்துடன் நடைபெற்ற விழாவில் சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.