பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் கூட்டாக தொழில் செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக கல்லூரி சந்தை நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற கல்லூரி சந்தையில் சுய உதவி குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பனை ஓலை பொருள்கள், செயற்கை நகை, மண் பாண்டம், அலங்கார பூ வகைகள், பொம்மை வகைகள், ஊறுகாய், சணல் பைகள், காலணிகள், மரப்பொருள்கள், துணி வகைகள் என பல பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 35 குழுக்களை சேர்ந்தவர்கள் விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி இதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் 93 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட ஆறாயிரத்து 193 சுய உதவி குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக இதுவரை நடத்தப்பட்ட 47 கல்லூரி சந்தைகள் மூலமாக ஆறு கோடியே 37 லட்சத்து 435 ரூபாய் அளவிற்கு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படித்துவிட்டு சொந்த தொழில் தொடங்கி முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அவர்கள் மகளிர் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இங்கு வந்துள்ள மகளிர் சுய உதவி குழு பெண்கள் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் உள்ளிட்ட புதுமையான பொருட்களை அதிக அளவில் தயாரித்து தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த முதற்கட்டமாக எட்டு வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-30 செயற்கைக்கோ
ள்