தூத்துக்குடியில் கரோனா தொற்றின் பாதிப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் அதிகமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில், சுகாதாரத் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறியதாவது, 'தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 7 ஆயிரத்து 800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு காய்ச்சல் பரிசோதனை மையத்தின் மூலமாக தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதிரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றது. மேலும் தினசரி 3 ஆயிரம் பேருடைய மாதிரிகளை, பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மாவட்டத்தில், 13 மாநகராட்சிப் பகுதி உட்பட மாவட்டத்தின் 48 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.