தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியே தினசரி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சீனா, பனாமா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடி வர்த்தக சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
கரோனா பரவல் முதல்கட்ட நிலையின்போது கூட அத்தியாவசிய தேவைகள் காரணமாக துறைமுகம் தொடர்ந்து இயங்கும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நேரத்திலும், அத்தியாவசிய சரக்குகள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணியில் வ.உ.சி.துறைமுகம் செயல்பட்டு வந்தது.
கரோனா ஊரடங்கு காலத்தில் மிகக் குறைந்த அளவு சரக்குகள் கையாளப்பட்ட நிலையில் சரக்கு கையாள்வதில் ஏற்பட்ட தேக்கநிலையை 2021ஆம் ஆண்டில் மீட்டெடுக்கும் பணியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுவீச்சில் செயல்பட்டு வந்தது.