தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊருணிகள் மற்றும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாசன குளங்கள் உள்ளன. இந்த நிலையில், கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், ஊராட்சி துறை கட்டப்பாட்டில் உள்ள ஊருணிகள், குட்டைகள், சிறு பாசன குளங்கள், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்கள் ஆகியவற்றிலிருந்து விவசாய பயன்பாட்டுக்காக கரம்பை மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், கரம்பை மண் தேவைப்படும் விவசாயிகள் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தால், அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் அனைத்து ஊராட்சிகளிலும் முகாம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், கரம்பை மண் எடுப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தினால் மட்டுமே, கரம்பை மண் எடுப்பது தங்களுக்கு சாத்தியப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சிறுதானிய பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிர்களில் போதிய மகசூல் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக ஊருணிகள், குட்டைகள், பொதுப்பணித்துறை குளங்கள் மண்மேடாக காணப்படுகின்றது. தற்போது நிலவும் கோடையை பயன்படுத்தி இந்த நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வார வேண்டியது அவசியம்.
ஆண்டுதோறும் விவசாயப் பயன்பாட்டுக்கு கரம்பை மண் தேவைப்படுவதால் அதனை நீர் நிலைகளில் இருந்து எடுக்க அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கரம்பை மண் அள்ளுவதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பெரும் இடையூறாக உள்ளது. தற்போது கரம்பை மண் அள்ள விவசாயிகள் வழங்கி உள்ள மனுக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று, அங்கிருந்து வட்டாட்சியரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் பரிந்துரைத்து, அதன் பின்னர் மனுக்கள் மண் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.