தூத்துக்குடி: மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கங்கைகொண்டான் முதல் மணியாச்சி வரை, கடம்பூரில் இருந்தும் தட்டப்பாறை வரையிலான பணிகளை முதற்கட்டமாக விரைந்து முடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, தென் மாவட்டத்தில் முதலாவதாக மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரயில் பாதைப் பணிகள் முடிக்கப்பட்டன. இந்தப் பாதையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
அப்போது, அதிகபட்சமாக ரயில் 123 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. 14 கிலோ மீட்டர் தூரத்தை எட்டு நிமிடங்களில் கடந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை ஏழு கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்தன. அதன்படி தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் வரையிலான ஏழு கிலோ மீட்டர் ரயில் பாதையில் பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் கடந்த 14ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு, புதிய ரயில் பாதையில் முதலில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயிலை இயக்கலாம். தொடர்ந்து படிப்படியாக ரயிலின் வேகத்தை 100 கி.மீ வரை அதிகரிக்கலாம் என அனுமதி அளித்துள்ளார்.