சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து இன்று (அக.15) தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர், மாணவர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் தொழில்நுட்ப கல்லூரி வாயில் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் இதைத் தொடர்ந்து மதியழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் தன்னிச்சையான முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இதனை மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் தமிழ்நாடு அரசின் அனுமதியோடு செய்ததாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதன் மூலமாக ஏழை மாணவர்கள் அங்கு படிக்க முடியாத சூழல் ஏற்படும்.
அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது மாணவர்கள் கல்வியை பாதிக்கும். எனவே மாணவர் நலனுக்கு எதிராகவும் மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்: காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்ட திமுக!