தூத்துக்குடி: ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நேற்று (நவ.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 98 நபர்களுக்கு ரூ.1,584 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எம்.பி கனிமொழி வழங்கினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக முதலமைச்சர் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024யை நடத்தவுள்ளார்கள். முதலீட்டாளர்கள் மாநாடு பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடு செய்யும் களமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை தொழில்முனைவோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான நிகழ்ச்சியாக இந்த தொழில் முதலீடுகள் மாநாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் 2030ல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு, அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஒரு நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும் மக்கள் அமைதியாக, ஒருங்கிணைந்து வாழக்கூடியதாக இருந்தால்தான் தொழிற்துறை வளர்ச்சி அடையும். அத்தகைய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு, கல்வி என அனைத்திலும் சிறந்து விளங்குவதோடு அமைதி பூங்காவாக எல்லோரும் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக உள்ளது. இந்த காரணத்தினால்தான் உலகில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை உற்றுநோக்கி முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு தமிழ்நாட்டை பாதுகாக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஒன்றிய அரசு இன்னும் 30 ஆண்டுகளுக்கு நிர்ணயித்துள்ள உயர்கல்விக்கான இலக்கினை தமிழ்நாடு இப்போதே எட்டியுள்ளது. தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க எந்தெந்த விதத்தில் உதவிகள் செய்ய முடியுமோ அந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முதுகெலும்பாக உள்ளது.