தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் ஆயுதப்படை மைதானம் முன்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இப்பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இப்பேரணியானது மாநகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு நிறைவடைந்தது. இப்பேரணியில் தன்னார்வலர்கள், போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அப்பகுதியில் வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம், லாரி, போருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இதில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு 13 வயதாகிறது.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை!