தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் டன் கணக்கில் வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்களில் அந்தந்த குப்பை சேமிப்பு கிடங்குகளில் கொட்டப்படுவதால், நாளடைவில் அவற்றிலிருந்து நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசும் நிலை இருந்துவருகிறது. இவ்வாறு டன் கணக்கில் சேமிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு பசுந்தீவனங்கள் தயாரிக்கவும், மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை போன்ற சமூக திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்டு வீணாக தூக்கி எறியப்பட்ட காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணியை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சேமிக்கப்படும் குப்பைகளில் உள்ள காய்கறி கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை சேர்த்து வைக்கப்பட்டு மறுஆக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்களை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சேமிக்கப்பட்டு, பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஒரு சோதனை முயற்சியாக காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முடிவு செய்தார். இதற்கான திட்ட வரையறைகள் வகுக்கப்பட்டு, ஒப்புதலுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. மாநகராட்சியின் புது முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து திடக்கழிவு வளாகத்திற்குள்ளேயே செங்கல்லுக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
காலி தண்ணீர் பாட்டில்களில் கடல் மண் அடைக்கப்பட்டு பாட்டில்களின் மூடி பசையால் சீல் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்லுக்கு பதிலாக மண் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் சிமெண்ட் கலவைகளுக்கு மத்தியில் அடுக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 1500 காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு, 6 அடி அகலம் 8 அடி நீளம் இருக்கும் வகையில் இந்த கழிவறை அமைக்கப்படுகிறது.