தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ள 647 குளங்களில் ஏறக்குறைய 95 விழுக்காடு குளங்கள் பருவமழை காரணமாக முழு கொள்ளவை எட்டியுள்ளன. இருப்பினும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மாநகர் பகுதிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நீர் ஆதாரங்களை காக்கும் தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி மாநகருக்கள் மழைநீர் வடிகால் ஓடை சரியான முறையில் திட்டமிடப்படாததும், பாதாள சாக்கடைத்திட்டம் இன்னமும் முழுமையடையாததுமே காரணமாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் பாதாள சாக்கடைத்திட்டம் தற்போது தான் இறுதி நிலைக்கு வந்துள்ளது. ஆயினும் பருவமழையினால் பணிகளை முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தண்ணீர் மட்டும் நீர் ஆதாரம் தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சி
இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டல உர செயலாக்க மையத்தில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டுள்ள புதுமுயற்சி பாராட்டும் விதத்தில் உள்ளது. வறண்ட நிலத்தில் குளம் வெட்டி வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பைப் மூலம் நீர் எடுத்து குளத்தை நிரப்பியுள்ளனர். குடியிருப்புகள் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள நீர் வற்றி மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியிருப்பதும், புதிதாக ஒரு நீர் நிலையை உருவாக்கிய பெருமையும் தூத்துக்குடி மாநகராட்சியை சென்றடைந்துள்ளது.
குளத்தில் நன்னீர் வாழ் பூச்சிகள் அதிகம் உள்ளதென்பதால் அவற்றை பிடித்து உண்ணுவதற்கு சிட்டுக்குருவிகள் படையெடுத்து காத்திருக்கின்றன. இவை போடும் எச்சங்கள் புதிய தாவரங்கள் வளர்வதற்கு உரமாகவும், சில சமயங்களில் குளத்தில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரையாகவும் பயன்படுகிறது.
11 நாள்கள் தூர்வாரும் பணி
மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த புது முயற்சி குறித்து தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல உரக்கிடங்கு மைய கண்காணிப்பாளர் ஹரிகணேஷ் கூறுகையில், "உரக்கிடங்கு செயலாக்க மையத்திற்கு அருகே காலியாக கிடந்த இடத்தை தேர்வு செய்து குளம் அமைப்பதற்காக தூர்வார முடிவு செய்தோம். ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு 11 நாள்கள் தூர்வாரும் பணி நடந்தது.
பழைய பொருள்கள் சேகரிப்பு
குளக்கரையை பலப்படுத்தும் பணிக்காக மாநகர குப்பை சேகரிப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட பொருள்களையே பயன்படுத்திக் கொண்டோம். பழுதடைந்த வாகன டயர்கள் குளக்கரையை பலப்படுத்துவதற்கு பதிக்கப்பட்டுள்ளன. இவை பதினைந்து அடுக்குகளாக படி வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் மண் அரிப்பை தடுக்க புளி, வெட்டிவேர், அழகு செடிகள், கம்பு திணை வகைகள், திரட்சை கொடி, மரவள்ளி, தர்பூசணி, சப்போட்டா உள்ளிட்ட செடி, கொடி வகைகளை வைத்துள்ளோம்.
அனைத்து தேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்
இந்த குளத்திற்கு தேவையான நீர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் பைப் இன்லட் மூலம் எடுத்து வரப்படுகிறது. இந்த குளம் சுமார் 350 சதுரமீட்டர் சுற்றளவு கொண்டதாகவும், 18 அடி ஆழம் உடையதாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேக்கி வைக்கப்படும் நீர், உரக்கிடங்கு செயலாக்க மைய எதிர்கால தேவைகளுக்கும், கட்டட வேலைகள் மற்றும் தனியார் நிறுவன நீர் தேவைகளுக்கும் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து தேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் இதுபோன்று மாநகராட்சியில் பல இடங்களிலும் நீர் நிலைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நீர் ஆதாரங்களை நிலைப்படுத்தும் தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் ஆக்கபூர்வ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க:'சாதிப்பதற்கு தாய்மை தடையில்லை' - 10 கி.மீ, 62 நிமிடம்... வியக்க வைத்த கர்ப்பிணி