ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர், சென்னையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் அங்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த மீன் பதப்படுத்தும் லாரியில் ஏறி குறுக்குச்சாலையில் இறங்கியுள்ளார்.
அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்ததால், அவரது நண்பரை அழைத்துக்கொண்டு தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். தொடர்ந்து நோயின் தாக்கம் குறையாத காரணத்தினால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர்தான், அவர் தான் சென்னையிலிருந்து வந்ததாகக் கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கரோனா தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த, அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.