தூத்துக்குடி: விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் மாரிமுத்து. இவர் நேற்று காலை (செப்.05) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்க சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு அலுவலர், அவரிடம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் பிற அடையாள அட்டைகளைக் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், தன்னிடம் மற்றுத்திறனாளி அட்டை கேட்பதாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார். உடனடியாக மேற்கண்ட நபரை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. பின்னர், மாரிமுத்துவும் ஆட்டோ மூலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். அவரால் ஆட்டோவில் இருந்து இறங்கிச் செல்ல முடியாததால், அதிகாரிகளே சம்பவ இடத்திற்குச் சென்று, மனுதாரரைப் பற்றி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையின்போது அதிகாரிகளிடம் அவர் கூறுகையில், “எனக்கு இரண்டு கைகளும் கால்களும் முழுமையாக செயல்படவில்லை. தந்தை இல்லை, தாயார் மட்டும் உள்ளார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள்; அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனக்கு 41 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது தந்தை பெயரில் ஒரு வீடு உள்ளது. வீட்டு அருகே சூப் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனக்கு உதவியாக எனது தாயார் இருக்கிறார்” என தெரிவித்தார்.