தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் மக்களவை உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது, இரவு நேர விமான சேவை, பிற முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்திற்கு பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விமானநிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்குச் செல்லும் விமானத்திலும் பிராந்திய மொழிகளில் அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.