தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கும், ராமலெட்சுமி என்பவருக்கும் கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கல்பனாதேவி, தங்க திலகவதி, சுவேதா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கரடிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரும் பாலசுப்பிரமணியனும் உறவினர்கள் ஆவர். கருப்பசாமி, மும்மலைப்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால், அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பற்றி அறிந்த பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசுப்பிரமணியன் காவல்துறையின் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின் சிறையில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியன், தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லமால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.