தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்' - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப் போவதுமில்லை. இந்தத் தேர்தலோடு அதிமுக காணாமல்போய்விடும் என ஸ்டாலின் கூறுகிறார். திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் என்று கயத்தாறில் பரப்புரை மேற்கொண்டபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

cm palanisamy election campaign in kayatharu
கயத்தாறில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

By

Published : Mar 27, 2021, 2:36 PM IST

தூத்துக்குடி: அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கயத்தாறில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரைக்குப் பின்னர் ஆண் குழந்தை ஒன்றுக்குப் பெயரையும் சூட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகன், திருச்செந்தூர் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன், தூத்துக்குடி தொகுதி அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகள் சிரித்து வாழ வேண்டும்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உழவர்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். பட்டாசுத் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும். பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும்.

உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்காகக் குடிமராமத்துப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மழைக்காலத்தில் நீர் சேமிக்கப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. உழவன் சிரித்து வாழ வேண்டும். ஏற்றத்துடன் வாழ வேண்டும்.

திமுகவுக்கு இது இறுதித் தேர்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்கள் எல்லாம் அதிமுக மற்றும் அமைச்சர்களை விமர்சனம் செய்துவருகிறார். அவர் பொய் கூறிவருகிறார். இந்தத் தேர்தலோடு அதிமுக காணாமல்போய்விடும் என அவர் கூறுகிறார்.

மு.க. ஸ்டாலின் கோவில்பட்டி தொகுதிக்கு வந்துப் பார்க்க வேண்டும். கோவில்பட்டியில் ஐந்தாவது முறையாக அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை நேரில் வந்து பாருங்கள். அதிமுகவை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப் போவதில்லை. திமுகவுக்கு இது இறுதித் தேர்தல்.

அதேபோல சில பேர் அதிமுகவைத் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்கள். அதையும் முறியடிப்போம். வெற்றி வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம். அதிமுக மக்கள் கட்சி. இந்தக் கட்சி உங்களுடைய கட்சி.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

அதிமுக அரசின் சாதனைகள்

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது. எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்ற நிலை இருந்தது. தமிழ்நாடு தற்போது மின்மிகை மாநிலமாக இருந்துவருகிறது. இதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டே இருக்கிறது.

மூன்று லட்சத்து 50 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 304 தொழிற்சாலைகள் தொழில் தொடங்க முன்வந்துள்ளதால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் முதலமைச்சர்

குறைந்தது 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 435 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் எழுதி மருத்துவக் கல்லூரி மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர். இது அடுத்த ஆண்டு 600 ஆக உயரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரையின் நிறைவில் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சேர்ந்த செல்வராஜ் என்பவரது குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தோஷ் ராஜ் என்று பெயர் சூட்டினார்.

இதையும் படிங்க: இரண்டு விஜயபாஸ்கரையும் டெபாசிட் இழக்க செய்யுங்கள்: கரூரில் ஸ்டாலின் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details