சென்னை: சேப்பாக்கத்தில் ‘மே பதினேழு’ இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஸ்டெர்லைட் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. சமரசம் இன்றி வெளி கொண்டு வந்தவர்கள் ஊடகங்கள் தமிழ்நாடு வரலாற்றில் மோசமான கரும்புள்ளி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு. இதற்கு முக்கிய காரணம், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நேரடி தலையீடு.
ஆனால், அது குறித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத் தொடர்பில்லாதது போல் காட்டுகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே ஸ்டெர்லைட் நிறுவனம் 144 தடை உத்தரவு போட வேண்டும் என நீதிமன்றம் சென்றது. இதனை வலிமையான ஒரு நிறுவனம் எப்படி இந்த நிகழ்வில் பங்கில்லாமல் இருக்கும்?. காவல் துறை அதிகாரிகளும் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு கொடுத்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இல்லை. அந்த இடம் அவர்களின் அதிகாரத்திற்கு உள்ளும் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்ற முன்முடிவு இருந்ததை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போராட்டத்தைக் கலைப்பதற்குத் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம், வருண், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வேறு பல வழிகள் மூலம் கலைத்திருக்க முடியும் ஆனால் அதனைச் செய்யவில்லை.
ஒரு மாவட்ட ஆட்சியர் இந்த பெரிய போராட்டத்தை கவனிக்காமல் வெளியே சென்றுவிட்டார். ஒருமுறை மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்னொரு பேச்சுவார்த்தை நடந்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை. அவர் போராட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்த தீயணைப்பு வாகனத்தை இறுதி நிமிடத்தில் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன், பின்னர் தான் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. யார் தீயணைப்பு வாகனத்தை அனுப்பியது என்ற விவரம் இல்லை. எதிரி நாட்டு ராணுவத்தைச் சுடுவது போலக் காவல் துறை சுட்டுள்ளது. திறமை இன்மையினால், ஒருங்கிணைப்பு இல்லை என்பதினால் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காவல் துறைக்கு அடையாளம் தெரியவில்லை எனக் கூறுவது ஏற்புடையதாக அல்ல.