கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், முருகனின் ஜென்ம நட்சத்திர விழாவான வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்று.
இத்திருவிழா வசந்த விழாவாக பத்து நாள்கள் நடைபெறும். இந்தாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
இதையடுத்து வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் கலந்துகொள்ளாததால் களையிழந்து காணப்பட்டது. அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் மட்டுமே விழாவில் கலந்துகொண்டனர்.
இன்று நடைபெற்ற விசாக திருவிழாவில் காலை 5 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆனால், பூஜைகளைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
விசாக திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி, கடலில் புனித நீராடி அங்கபிரதக்ஷனம் செய்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் விசாக திருவிழா, ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாருமின்றி நடந்ததால், கடற்கரை, கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டன.